அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்ததாக பேஸ்புக் மற்றும் கூகுள் இணைய தளங்கள் மீது உலகளாவிய விமர்சனம் எழுந்தது தெரிந்ததே. பாரதத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டு. அதைத் தடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா கூகுள்,ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அக்கலந்துரையாடலின் போது, கூகுள், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அதிகாரிகள் தேர்தல் ஆணையருக்கு இவ்விஷயத்தில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று எழுத்தில் உறுதி கூறியுள்ளனர். பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுளில், போலி மற்றும் பொய்யான செய்திகள் தங்கள் வலைத்தளங்களில் யாரும் பரப்பாமல் இருக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

தேர்தல் காலத்தின் போது போலி செய்தி மற்றும் வெறுப்புணர்வு உரையாடல்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் சமூக ஊடக வலைததளங்களில் பதிவதை தடுக்க அவசியமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று இந்த மூன்று அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் உறுதி செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் புகார் செய்தால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்று திரு சுனில் அரோரா கூறினார். இதை நடைமுறைப் படுத்துவதைக் குறித்து, இந்தியாவின் இணைய மற்றும் கைபேசி சங்கத்துடன் கலந்தாலோசித்து நெறிமுறைகளின் குறியீட்டை உருவாக்க இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

போலிச் செய்திகளை சரிபார்க்கவும், அதைப் பரப்பும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், சமூக ஊடக தளங்கள் அதிகாரிகளை நியமிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து வேட்பாளர்களும் தேசிய தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது, தங்கள் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களில் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களும் முன் சான்றிதழ் தேவைப்படும். மேலும் கூகுள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூட்யூப் ஆகியவை அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் விளம்பரங்களை சரிபார்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் செலவின் கணக்கில் சமூக ஊடகங்களில் பிரச்சார விளம்பரங்களில் செலவிடப்படும் செலவுகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சமூக வலைத் தளங்களால் அமெரிக்க தேர்தலில் நடந்ததாக சொல்லப்படும் மோசடி நம் நாட்டில் நடைபெறாமல் இருக்க இந்திய தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

Share