Amazon Great Indian Sale - 2019

தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தால் இந்திய அரசு தலையிட்டு இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்று கருணாநிதி பொய் கூறினார் என்றும், அவரது பேச்சைக் கேட்டு ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் பதுங்கு குழியிலிருந்து வெளி வந்த அடுத்த நிமிடமே இலங்கை இராணுவத்தால் கொத்து கொத்தாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருச்சி கூட்டாத்தில் கூறினார்.    

திருச்சி பொன்மலை ரயில்வே ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்ற 2016 சட்டசபை தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: கபட நாடகங்களை ஆடி இலங்கை தமிழருக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது.

Advertisement Amazon Great Indian Sale - 2019

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை நாட்டிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் அங்கு வசிக்கும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். 

எனவே தான், இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து 1980-களிலிருந்து பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகள் ‘சுயாட்சி அந்தஸ்து”, ‘தனி ஈழம்’ என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தன. 

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்று கொண்டார்.  இங்கே தமிழ் நாட்டில் 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. 

ஆட்சிக்கு வருவதற்கு முன் 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘ஈழத் தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழி காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவர்கள் செய்தது என்னவோ இதற்கு எதிர்மறையான செயல்களைத் தான். 

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியிலே நடைபெற்று வந்தது.  இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன.

இவை அனைத்தும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக-விற்கு நன்கு தெரியும்.  இருப்பினும், கருணாநிதி இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்தியாவிடமிருந்து ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை, 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும் இலங்கை தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. 

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பல முறை வற்புறுத்தினேன்.  ஆனால் இதை செய்வதற்கு மனம் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் திரு. கருணாநிதி எடுக்கவில்லை. 

மக்களை ஏமாற்றும் விதமாக  “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்”, “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனித சங்கிலி போராட்டம்”, “பிரதமருக்கு தந்தி”, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா”

என்ற வெற்று அறிவிப்புகளுடன் ராஜிநாமாக் கடிதங்களை தானே பெற்று வைத்துக் கொண்டது; “இறுதி எச்சரிக்கை” என்ற அறிவிப்பு என பல்வேறு நாடகங்களை நடத்தி,

இறுதி நாடகமாக “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக படுத்துக் கொண்டு உண்ணாவிரத  நாடகத்தை முடித்துக் கொண்டார். 

அவ்வாறு முடிக்கும் போது, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டு விட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார் திரு. கருணாநிதி.  போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று இவரது பேச்சைக் கேட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்தனர்.

இலங்கை ராணுவம் அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. குண்டு மழைக்கு விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் கூட குண்டுகள் வீசப்பட்டு தமிழர் இனப் படுகொலை நடத்தப்பட்டது.

3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட திரு. கருணாநிதி, இலங்கையில் தமிழர்களின்  மீதான போரை நிறுத்தி விட்டதாக மத்திய அரசு தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தான் காங்கிரஸ்காரர்களால் அவ்வாறு ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லி வந்தார். 

Share