2019 தேர்தல்செய்திகள்

தமிழகம் , புதுவை ஒரே நாளில் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி

அரசியல் கட்சியினரும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லோக்சபாவிற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .
நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார். ஏப்., 11 ம் தேதி முதல்கட்ட தேர்தல் துவங்குகிறது. தேர்தல் கமிஷனர்கள் சுனில் அரோரா, அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

பேட்டியில் சுனில் அரோரா கூறியதாவது: தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதே எங்களது இலக்கு. வாக்காளர் பட்டியல், சரியாக இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டுப்போட உள்ளனர். 18 முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களாக 8.4 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 மாநிலங்களில் 100 சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 

தேவைக்கு அதிகமான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில்உள்ளன. நாடு முழுவதும் 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாவடிகளிலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு முறை பயன்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிகள் பயன்படுத்த கூடாது.

பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பர செலவுகளும், வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்தல் – ஏப்.,11, 2 ம் கட்ட தேர்தல் – ஏப்.,18, 3ம் கட்ட தேர்தல் – ஏப்.,23, 4ம் கட்ட தேர்தல் – ஏப்.,29, 5 ம் கட்ட தேர்தல் – மே 6, 6 ம் கட்ட தேர்தல் – மே12, 7 ம் கட்ட தேர்தல் – மே 19-  ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஏப்.,18 –ல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.  

Tags
Show More
Back to top button
Close
Close