ஜம்மு – காஷ்மீரில் இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுக்கான பாதுகாப்பு, திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜமாத் – இ – இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் என்ற அமைப்புக்கு, மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. பிரிவினைவாத இயக்கத் தலைவர், சையது அலி ஷா கிலானி, இந்த அமைப்புடன் நேரடி தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, உள்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாக தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது : “மதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட, ஜமாத் – இ – இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், பிரிவினைவாத தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜம்மு – காஷ்மீரை, இந்தியாவில் இருந்து பிரித்து, பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என, பிரிவினைவாத தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த ஜமாத் அமைப்புக்கு, பாக்.,கின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன் நேரடி தொடர்பு உள்ளது. இந்த அமைப்பு, ஜம்மு – காஷ்மீரில் பல பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில், மதம் தொடர்பான கல்வியுடன், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.சில பள்ளிகள், பயங்கரவாத பயிற்சி அளிக்கும் முகாம்களாகவும் செயல்படுகின்றன. ஐ.எஸ்.ஐ., மற்றும் பாக்.,கைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவுகளை, இங்குள்ள பிரிவினைவாத இயக்கங்கள் நிறைவேற்றி வருகின்றன.

காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவதும், இந்த அமைப்புகளே. பாக்., மற்றும் பயங்கரவாத இயக்கங்களிடம் பணத்தை பெற்று, பயங்கரவாதத்தை வளர்க்கும் பணியில் இவை ஈடுபட்டு உள்ளன.தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் அமைப்பு மற்றும் பிற அமைப்புகளுக்கு, பணம் வருவதை தடுக்கும் நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன. இவை நடத்தும் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது”.

Share