ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் துணை ராணுவ படையின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு பிரதமர் மோடி ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களிடையே செல்வாக்கு பல மடங்கு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் 22க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து மகா பந்தனம் என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்தன.

இதற்காக டெல்லியில் ஆலோசனைக் கூட்டங்களும், பல்வேறு நகரங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், புல்வாமாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கொடுஞ்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப்பின், பிரதமர் மோடியின் செல்வாக்கு பல மடங்கு கூடியுள்ளது.

இதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்பாடுகளைக் கைவிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோருடன் காங்கிரஸ் தலைமை புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

அவர்களை ஓரணியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ராகுல்காந்தியை சரத்பவார், சந்திரபாபு ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.


Share