தமிழ் நாடு

நாடும் நமதே !! நாற்பதும் நமதே !! தூத்துக்குடி நிகழ்ச்சியில் பியூஸ் கோயல் பேச்சு..!

தமிழக மக்கள் அதிமுக – பாஜக கூட்டணியை ஏற்று 40 தொகுதிகளிலும்  வெற்றியை  அளிப்பார்கள் என்றும், இதன்மூலம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று அனைவரும் எல்லா திட்டங்களிலும் பயனடைவார்கள் என்றும் பியூஸ் கோயல் கூறினார்.   

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக மின் உற்பத்தி- பகிர்மான கழகம் இணைந்து என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா தூத்துக்குடி துறைமுக பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.

அதில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மத்தியில் மோடியும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்திருப்பது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சேர்ந்த கூட்டணி.

இன்று நமது நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத்தால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு வலிமையான தலைவர் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட தலைவராக, நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.

தமிழக மக்கள் சரியான முடிவு எடுத்து எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்கும் போது மத்தியில் வலிமையான அரசு அமைவதோடு அனைவருக்கும் எல்லா திட்டங்களும் கிடைக்கின்ற வகையில் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் உதவி புரிவார்கள்.

இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான அரசாங்கத்தை உருவாக்கும். நாட்டை நாமே மீண்டும் நல்லபடியாக ஆள்வோம். நமது ராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் பேசி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.

காஞ்சிபுரத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ் ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close