இந்தியா

விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பிரதமர் மோடி.. ராமதாஸ் பாராட்டு.!

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டும்படி உள்ளன. இதன் மூலம் கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வைத்துள்ள நிலுவைத் தொகையை சுலபமாக அளிக்க வழி வகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்காக தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

சர்க்கரை ஆலைகளுக்கு மென்கடன் வழங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சலுகையையும் மத்திய அரசு இரு வாரங்களுக்கு முன்பு வழங்கியது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோ 29 ரூபாயிலிருந்து 31 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டது தான் அந்த சலுகை ஆகும். இதன்மூலம் நிலுவைத்தொகையை ஆலைகள் வழங்கமுடியும். இது மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை.

அதுமட்டுமின்றி, சர்க்கரை ஏற்றுமதிக்கான 20% வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசு, இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 100% ஆக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை நிலைத்தன்மை பெறும்.

இத்தகைய சூழலில் இந்த வசதிகள் அனைத்தையும் தனியார் சர்க்கரை ஆலைகள் முழுமையாக பயன்படுத்தி கரும்பு விவசாயிகளின் கடனை அடைக்கின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டியது தான் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் முக்கியக் கடமை ஆகும்.

எனவே, மத்திய அரசின் மென்கடன் உதவிபெற்ற சர்க்கரை ஆலைகள், அதைக் கொண்டு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொழில்துறை, வேளாண் துறை அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை அரசு அமைக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close