தமிழ் நாடு

படிச்சது எம்.பி.ஏ.,! அடிச்சது கள்ள நோட்டு..! கடலூரில் சிக்கிய பெண்..!

கடன் பிரச்னையால் கள்ளநோட்டு அடித்த எம்.பி.ஏ., பட்டதாரிப் பெண்ணை போலீசார் கைதுசெய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழரசி. கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமுதா. இவர்கள் இருவரும் கடலூர் பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்துவருகிறார்கள்.

இவர்கள், நேற்று வழக்கம்போல பழ வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். பகல் 1 மணியளவில் டிப்டாப் பாக வந்த ஒரு பெண், குமுதாவிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து சில்லறை கேட்டுள்ளார். ஆனால் அவர் இல்லை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து அவருக்குப் பக்கத்தில் இருந்த தமிழரசியிடம் சில்லறை கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்தபோது கள்ள நோட்டு என்று தெரியவந்துள்ளது.

இதனால் தமிழரசி, அந்தப் பெண்ணிடம் தனக்குத் தெரிந்தவரிடம் சில்லறை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, அவரும் குமுதாவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் காண்பித்தனர்.

அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த போலீஸார், அது கள்ளநோட்டு என்பதைக் உறுதி படுத்தினர். இதனை அறிந்த அந்த டிப்டாப் பெண் அங்கிருந்து ஓடியுள்ளார்.

உஷாரான போலீஸார் அந்தப் பெண்ணை பஸ் நிலையம் முழுவதும் தேடினர். அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் டவுன் பஸ்சில் அந்த பெண் அமர்ந்திருந்தார். உடனடியாக போலீஸார் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் மாரியப்பா நகர் 3-வது குறுக்குதெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி பரணிகுமாரி (35) எனத் தெரியவந்தது.

மேலும், தொடர்ந்து பரணிகுமாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் யூடியூப் பார்த்து கள்ளநோட்டை அடித்ததாகவும் இதனைக் கடலூர் பஸ் நிலையத்தில் புழக்கத்தில் விடும்போது மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

பரணிகுமாரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். படித்த பெண் ஒருவர் கள்ள நோட்டு அடித்த சம்பவம் சிதம்பரம் மற்றும் கடலூரில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close