இந்தியா

விங் கமாண்டர் அபிநந்தனின் 60 மணி நேர போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் : பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது அறிவிப்பு..!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, 60 மணி நேரத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

நாடு திரும்பிய அபிநந்தனுக்கு டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாட்களுக்கு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அபிநந்தனின் குடும்பத்தாரும், மருத்துவமனையில் அவரை சந்தித்தனர்.

இந்த நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மகாவீர் ஜெயந்தியன்று ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி அறிவித்துள்ளது.அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், பாக்.,கில் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அவரை மனரீதியில் தயார் படுத்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது உடலில் உளவு பார்க்கும் கருவிகள் எதுவும் வைக்கப்படவில்லை என எம்.ஆர்.ஐ., ஸ்கேன் முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு  மகாவீர் ஜெயந்தி தினத்தன்று (ஏப்ரல் 17) ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.இவ்விருதை பெறுபவர் செய்த சாதனைப் பட்டயத்துடன் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் அபிநந்தனுக்கு அளிக்கப்படும்.

Tags
Show More
Back to top button
Close
Close