2019 தேர்தல்

அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்தது .. 4 + 1 + 20 என முடிவு ? நாளை மறுநாள் ஒப்பந்தம் என நம்பகத் தகவல்கள்.!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு முதல்முறையாக விஜயகாந்த் தே.மு.தி.க  அலுவலகத்திற்கு  இன்று காலை வருகை தந்தார்.  கூட்டணி குறித்துப் பேச அமைக்கப்பட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தே.மு.தி.க.வுக்கு 4  பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரவும்,  தேமுதிகவுக்கு 20 சதவீத  இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகமாக இருப்பதாகவும், இந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் தேமுதிக பல முனைகளிலிருந்தும் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.  

தே.மு.தி.க. கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அ.தி.மு.க.கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் விரும்புவதாகவும்,  இதற்காக டெல்லியில் இருந்து மத்திய மந்திரி பியூஸ்கோயல் அதிமுகவினருடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க-பா.ஜனதா இரு தரப்பில் இருந்தும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் பேசி வருகின்றனர். இதில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு 4 பாராளுமன்ற தொகுதியும் 1 மேல்- சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அ.தி.மு.க. வசம் 23 தொகுதிகள் இருக்கும். இதில் 1 தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 22  தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

சென்னையில் வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து தங்களது பலத்தை காட்ட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப அ.தி.மு.க. தே.மு.தி.க. இடையே வருகிற 3-ந்தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தே.மு.தி.க.வுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று நேற்று கூறினார்.

இதே போல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், “தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஓரிரு தினங்களில் நல்ல முடிவு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close