செய்திகள்

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் சம்பவம் : பிரதமர் மோடிக்கும், விமானப்படைக்கும் விஜயகாந்த் நன்றி, வாழ்த்து

சென்ற 14 ந்தேதி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் 40 இந்திய வீரர்கள் மீது வெடி குண்டு நிரப்பிய காரை மோத செய்து படுகொலை செய்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்துள்ளது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தினரின் தலைமையகம், பயிற்சிக் கூடங்கள் முற்றிலும் தகர்ந்ததாகவும், 300 க்கும் மேற்பட்ட  பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசு மற்றும் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் இருந்து பலத்த பாராட்டு குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் டுவிட்டர் மூலம் தனது நன்றி மற்றும் வாழ்த்துக்களை பிரதமருக்கும், விமானப்படைக்கும் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.


Tags
Show More
Back to top button
Close
Close