சென்னை, இந்தி பிரச்சார சபாவின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி சிலையை  திறந்து வைத்தார். அப்போது அவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

மிக அழகிய தமிழ்மொழி செம்மையான கலாச்சாரம், தொன்மையான வரலாறு, திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள் ஆகிய சிறப்புகளைக் கொண்டது  தமிழகம். 
இந்த தஷிணபாரத இந்தி பிரச்சார சபாவை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி நிறுவினார். இதை நிறுவி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது.

தென் மாநில மொழிகளையும், ஆவணங்களையும் வட மாநில மக்கள் அவசியம் கற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி எப்போதும் வலியுறுத்தி வந்தார். அதே  எண்ணத்தில்தான், அவர் இங்கு தஷிணபாரத் இந்தி சபையையும் நிறுவினார்.

ஒரு பிராந்தியத்தை சேர்ந்த மொழியை மற்றொரு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள்  கற்றுக் கொள்வது பண்பாட்டு பரிமாற்றத்துக்கு காரணமாக இருக்கும்.

டெல்லியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் வட மாநில மாணவர்கள் தமிழ் மொழியை  கற்கின்றனர். சுதந்திர போராட்ட காலத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதி, தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநில மக்களையும் தனது கவிதைகளால் ஈர்த்தவர்.

இவர்களின் இந்த செயல்களை மொழி மற்றும் ஒரு பிராந்தியத்துக்குள் அடக்கிவிட முடியாது. நமது நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த  ராஜகோபாலாச்சாரியார், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் தமிழகத்தை சேர்ந்த பன்மொழித் திறன் கொண்டவர்கள்.

இவர்களின்  சிந்தனைகள் மற்றும் அவர்களின் பங்கு மொழிகளை கடந்தவை.  ஒரு மாநில மொழியை அல்லது ஒரு பிராந்தியத்தின் மொழியை அறிந்து கொள்வதும், அதை சார்ந்து இருப்பதும் அது நமக்கான உடைமையாக இருக்கும்.அது நமது  நாட்டின் மதிப்பை உயர்த்துவதாக இருக்கும்.

பல மொழிகளை கற்பது தனி மனிதர்களின் அந்தஸ்தை உயர்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.

Share