காஷ்மீரிலுள்ள புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் கும்பலைக் கண்டறியும் பணியில் என்ஐஏ அதிகாரிகளுக்கு உதவும் பணியில் மாருதி சுசூகி நிறுவனப் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதியன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பாகங்களைச் சேகரித்து, அதிலுள்ள என்ஜின் நம்பர்மற்றும் வேறு சில பாகங்களின் வடிவமைப்பின் அடிப்படையில் அந்த வாகனம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, யாரின் பெயரில் அந்த வாகனம் இருந்தது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முயன்று வருகின்றனர்.

இந்த பணிக்காக மாருதி சுசூகி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு புல்வாமாபகுதிக்குச் சென்று சிதறிக்கிடந்த வாகன பாகங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

“எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது, எந்த மாநிலத்தில் எந்த ஷோரூமில் கார் விற்பனை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய முடியும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share