செய்திகள்

அதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 லோக்சபா இடங்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் விரைவில் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை, அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். இதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

தொடர்ந்து, இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அதிமுக தரப்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அதிமுக, பாமக இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.தி.மு.க சார்பில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ம.க சார்பில், ஜி.கே.மணியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ம.க-வுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.

பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பா.ம.க போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கோதாவரி உள்ளிட்ட முக்கிய 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பா.ம.க முன்வைத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் பா.ம.க வலியுறுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close