பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமானவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் சூளுரைத்துள்ளார். 

டெல்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகவும், இது மிகவும் உணர்ச்சிவசமான நேரம் எனவும் கூறினார். இதை நாடு ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதை உலக அரங்கிற்கு உணர்த்த வேண்டும் என்றும், அரசு தரப்பாக இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையாக இருந்தாலும் அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என அண்டை நாடு நினைத்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மோடி, தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றார். தீவிரவாத இயக்கங்களும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உலக அரங்கில் தனிமைப்பட்டுப் போயுள்ள பாகிஸ்தான், இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என நினைத்தால், அதற்கு மிகப்பெரிய விலையை அந்நாடு கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் பிரதமர் எச்சரித்தார். தீவிரவாதம் அடியோடு நசுக்கப்படும் எனக் குறிப்பிட்ட மோடி, ராணுவ படைகளுக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீரத்தில் முழுநம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். தீவிரவாதத் தாக்குதால் நாடே கடுங் கோபத்தில் உள்ளதை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Share