மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிராமங்களில் கட்டப்படும் வீடுகள், மகளிரின் பெயரில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கிராமப்புற சுகாதாரத்தை பேணிக் காத்த மகளிர் பஞ்சாயத்து தலைவர்களில் சிறந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அந்த மாநிலத்தின் பாடசா நகரில் கட்டப்பட்டுள்ள 700 படுக்கைகளை கொண்ட தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையை மோடி திறந்து வைத்தார். பரிதாபாத்தில், மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகத்தால் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் நடைமுறை படுத்தப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியைக் கண்டு, நைஜீரிய நாட்டு சுகாதாரக் குழுவினர் தற்போது அரியானாவுக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதை பார்வையிட்டு அதனை நைஜீரியாவில் செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்த இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக மோடி குறிப்பிட்டார். இதனால் ஊழல்வாதிகளுக்கு தம்மை பிடிக்கவில்லை என்ற அவர், மக்களுக்கு காவலனாக உள்ள தம்மை, நல்லவர்கள் நேசிக்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணியை, ஒன்று கலந்த ஊழல் கூட்டணி என்று வர்ணித்த மோடி, அந்த கூட்டணியில் உள்ள சிலர் நீதிமன்றத்தையும், சிலர் சிபிஐயையும், சிலர் தம்மையும் மிரட்டுவதாக கூறினார். தம்மை மிரட்டிப் பார்ப்பதில் எதிர்க்கட்சி கூட்டணியில் பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளதாக அவர் கிண்டலடித்தார். பா.ஜ.க மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதாக கூறிய மோடி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிராமங்களில் கட்டப்படும் வீடுகள், மகளிரின் பெயரிலேய பத்திரப்பதிவு செய்யப்படும் என்றார்.

Share