நாட்டின் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டதால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சிவசேனை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை, பல்வேறு சூழ்நிலைகளில் அக்கட்சியை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிவசேனை எம்.பி ஆனந்த்ராவ் அத்சுல் மக்களவையில் புதன்கிழமை பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார். அவரது இந்தக் கருத்துக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர். அதேபோல், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று கூறிய மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டதாக தெரிவித்தார்.

சீக்கிய சமூகத்தினருக்கு நன்மை செய்யும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக மத்திய அமைச்சரும், அகாலி தளம் தலைவருமான ஹர்சிம்ரத் கெளர் பாதல் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனிடையே, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் ஜிதேந்தர் ரெட்டி, தெலங்கானா மக்கள் எப்போதுமே நட்பு பாராட்டுபவர்கள். ஆனால், யார் நண்பர்? யார் எதிரி? என மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று கூறினார். அதேபோல், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை சிறப்பாக வழிநடத்தியதற்காக மக்களவை உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
  

Share