கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ₹4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வது போல் அருணாச்சல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சல பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரசுக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share