The first ATM installed at Palika Kendra dispensary. Source : Indian Express

கூட்ட நெரிசலின்றி நோயாளிகள் மருந்துகளை பெறும் வகையில் மருந்துகளை தரும் ஏ.டி.எம் இயந்திரங்களை அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுக்க வேண்டும் எனமருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால், இவர்கள் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மாத்திரை, மருந்துகளை பெற்று வருகின்றனர். 

இவர்கள் தவிர, புதிய நோயாளிகளும் மருந்து வாங்க வருவதால், அரசு மருத்துவமனையில் மருந்து வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து ஏடிஎம்-களில் பணம் எடுப்பதை போல், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பார்கோடுகளுடன் கூடிய மருந்து சீட்டு இரண்டு முறை ஸ்கேன் செய்யப்படும். பின்னர், அதில் உள்ள மருந்துகளை வழங்கும் வகையில் சாப்ட்வேர் அமைக்கப்படுகிறது. 

மேலும், நோயாளி இரு முறை மருந்து சீட்டை இயந்திரத்திற்குள் செலுத்தினால் அல்லது மருத்துவரை பார்க்காமல் இருந்தால், அவர்களுக்கு மருந்துகளை இயந்திரம் வழங்காது. அந்த வகையில் இந்த மருந்து வழங்கும் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரங்கள் நோயாளிகள் அதிகளவில்வரும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share