Picture by C.Rieck/ Wikimedia Commons

மழைநீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர், அர்ஜூன் ராம் மெக்வால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார். 

அதில், தண்ணீர் என்பது மாநில பட்டியலில் உள்ளதாகவும், மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் உற்பத்தி ஆகியவற்றுக்காக தங்களது மாநிலத்திற்கென பிரத்யேக செயல் திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாநில அரசுகளின் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சுவதால், நீரகங்களுக்குத் தண்ணீரை அனுப்புவதற்கும் விரைவான உத்திகளைக் கையாள வேண்டும். நீரகங்களின் பல்வேறு அடுக்குகளில் மழை நீர் எப்படி நுழைந்து தங்கியது என்பதைப் புரிந்து பின்பற்றினால், மழை நீரையும் அதே வகையில் சேமிக்கலாம். மழை பெய்யும்போது தரையின் மேல் அடுக்குகளில் தண்ணீர் ஊறி இறங்குகிறது. அங்கு நிரம்பிய பிறகு அடுத்து கீழே உள்ள அடுக்குகளில் உள்ள காற்றை வெளியேற்றிவிட்டு அங்கு நிறைகிறது. தண்ணீர் இப்படித் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தால் அது ஒவ்வொரு அடுக்காகக் கீழே இறங்கி நிரம்பிக்கொண்டே இருக்கிறது.

இப்படி நீர் இறங்குவதற்கு மணல் துகள்களும் அவற்றுக்கு இடையில் காற்றுக்குமிழ்களும் அவசியம். தொடர் மழை இல்லாவிட்டால் மேல் அடுக்கு முதலில் காய்ந்துவிடும். அதற்குப் பிறகு அடுத்தடுத்த அடுக்குகளில் உள்ள தண்ணீர், காற்று சூடாகி வெளியேறும் இடத்தை நிரப்ப மேல்நோக்கி வரத் தொடங்கும். எனவே, தண்ணீர் கீழே இறங்கியதுபோலத் தோன்றினாலும் பிறகு மேலேறி வந்து ஆவியாகிவிடும். பருவநிலை மாறுதல் காரணமாக ஒரே நாளில் அதிகபட்ச மழை ஒரே நகரில் அல்லது பிரதேசத்தில் கொட்டித்தீர்ப்பதைச் சமீபத்திய ஆண்டுகளில் பார்க்கிறோம். இப்படிப் பெய்யும் மழையால் நிலத்தடி நீர் இருப்பு பெருகாது. தூர்வாரப்பட்ட வாய்க்கால்கள், தடுப்பணை போன்றவை இல்லையென்றால் நீர்நிலைகளில் மழை நீர் நிரம்பாது. பெருமழை பெய்து ஓய்ந்த சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட இதுவே காரணம்.

குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் ஆங்காங்கே உறை கிணறுகளைப் போல பள்ளங்களைத் தோண்டி அவற்றில் செங்கல் உடைசல், சரளைக் கற்கள் போன்றவற்றை மணலுடன் சேர்த்துக் கலந்து மூடிவிட வேண்டும். பெருமழை பெய்யும்போது இந்தப் பள்ளங்களில் ஏராளமான நீர் புகுந்து தரைமட்டத்தில் ஊடுருவும். நிலத்தடி நீர் இருப்பும் மட்டமும் கணிசமாக உயரும். வெறும் தரையான குளத்திலோ, ஏரியிலோ சேருவதைவிட இதில் அதிக நீர் சேரும். இதையே வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்களிலும் மேற்கொள்ளலாம்.

நகரங்களில் ஆங்காங்கே திறந்த வெளிப் பூங்காக்களை உருவாக்க வேண்டும். அந்தப் பூங்காக்களின் தரைமட்டம் நகரச் சாலை மட்டத்தைவிட இரண்டு அல்லது மூன்றடி உயரம் குறைவாக இருக்க வேண்டும். சாலையில் வழிந்தோடும் நீர் இந்தப் பூங்காக்களின் மண்தரையில் இறங்கி ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திவிடும். வெள்ளநீர் வடிகாலைச் சுத்தமாக வைத்திருந்து அதில் திரளும் நீரை அப்படியே குளம், ஏரி போன்றவற்றுக்குத் திருப்பியும் மழை நீரைச் சேமிக்க முடியும். சரியான வழிமுறைகளைப் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் கையாள்வதன் மூலம் நகரங்களிலும் கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பெருகச் செய்ய முடியும்.

Share