நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். 

பா.ஜ.க மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.  இவர் கடந்த 1996 (13 நாட்களும்), 1998-99 (13 மாதங்களும்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டி வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் இன்று திறக்கப்பட்டது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, வாஜ்பாயின் முழு உருவப்படத்தை குடியரசு துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Share