வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இன்று திருமணம் செய்துள்ளார்.  திருமணம் இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, சி.வி.சண்முகம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கமலஹாசன், மு.க.அழகிரி, சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு இன்று திருமணம் நடைபெற்றது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இன்று நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப் பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் கலந்துகொண்டார்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம் அமைச்சரவை சகாக்களுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா – அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் செளந்தர்யா இன்று மறுமணம் செய்துள்ளார். மணமகளுக்கு மணமகன் தாலி கட்டும் நிகழ்ச்சியில் மணமகள் செளந்தர்யா  முந்தைய  கணவர் மூலம் பெற்ற மகன் வேத்தை  தனது மடியில்  வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

Share