சிறுதொழில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கென தமிழில் பிரத்யேகமாக தனி வலைதளம் உருவாக்கப்பட்டு, சிறு தொழில்முனைவோர் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதிலும், சுய வேலைவாய்ப்பு பெறுவதிலும் இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. நாட்டின் வருவாயில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலம் கணிசமான வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. அதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனை, வழிகாட்டுதல்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இணையதளம் மூலமாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் ஆங்கில அறிவு சிறிதேனும் இருந்தால் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது.  

குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர் தாம் தேர்வு செய்த தொழிலுக்குத் தேவையான நிதி, சந்தை வாய்ப்புகள், அரசின் தொழிற் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள், பெற வேண்டிய உரிமங்கள், சலுகைகள், தொழிற் போட்டிகள், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள், அறிவுசார் சொத்து உரிமைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதுபோன்ற சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ள சூழ்நிலையில், ஓரளவுக்குப் படித்த, ஆங்கிலம் தெரியாத தொழில்முனைவோரும் பயன் பெறும் வகையில் சிறுதொழில் என்ற பெயரில் தமிழில் பிரத்யேகமான தனி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தின் பெயர் மட்டுமே http://siruthozhil.in/  என்று ஆங்கிலத்தில் உள்ளது. அந்த வலைதளப் பக்கத்தில் சிறுதொழில் குறித்த அனைத்து தகவல்களும் தமிழிலேயே உள்ளன.  சிறுதொழில் முனைவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, சிட்பி வங்கியின் (Small Industries Development Bank of India -SIDBI) அதிகாரி ஆர்.சுகுமார் முயற்சியால் இந்த சிறுதொழில் வலைதளம் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 
http://siruthozhil.in/

Share