தி இந்து குழுமத்தின் ஆசிரியர் ராம் தன்னுடைய வழக்கமான உண்மையைத் திரிக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு படி மேலே சென்று அவதூறு பரப்புவதைத் தாண்டி கூச்சம் இல்லாமல் முழு உண்மையை மறைக்கும் வேலையைச் செய்துவிட்டு “உண்மை ஆராய வேண்டும்” என்று தந்திரமாக நழுவுகிறார். அரசு விளம்பரங்களுக்காக இவ்வளவு தொகை செலவிட்டது என்று கூறி பெரிது படுத்தும் இவர்கள் வெளியிட மறுத்த உண்மை என்னவென்றால்… எதற்காக செலவிடப்பட்டது? எப்படிச் செலவிடப்பட்டது என்பது தான். 

எந்த டீவி மீடியா மக்கள் நலத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக வேலை செய்யும்? தி இந்து ராம் இலவசமாக விளம்பரம் செய்வாரா அரசின் திட்டத்தை? ஆக மக்களுக்குத் திட்ட விவரங்களைக் கொண்டு செல்ல அரசு விளம்பரம் செய்வது ஆக அவசியமான தேவை. அது முறையாக நடக்கிறதா என்று விரிவாக ஒரு ஆய்வு அல்லவா ஒரு பத்திரிக்கை செய்தியாக இருக்க வேண்டும்? தி இந்து ராம் இதைச் செய்ய விரும்பவில்லை. கொடுமை என்னவென்றால் அரசு விளம்பரத்தில் லாபம் ஈட்டுவதே இவர்கள் தான். அரசு விளம்பரத்தையும் வாங்கிக்கொண்டு அதன் லாபத்தையும் திண்றுவிட்டு, அந்த விளம்பரத்தைச் செய்ததையே ஒரு செய்தியாக எதிர்மறையாகக் கொண்டு சேர்க்கும் அந்த கீழ்த்தரமான செய்தி திரிக்கும் மனநிலையில் தான் செயல்படுகின்றனர்.

அந்த வகையில் தான் சமீபத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில்  ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, ஒப்பந்த அதிகாரிகள் சார்பாக, அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கருக்கு எழுத்தப்பட்ட கடிதம்தான் பிரச்னைக்கு காரணம். இந்த கடிதத்தை வைத்துதான் தி இந்து பத்திரிக்கை கட்டுரையை எழுதியுள்ளது. இந்த கடிதம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இது பிரதமர் மீது குற்றஞ்சாட்டி, பாதுகாப்பு மந்திரிக்கு எழுதப்பட்ட கடிதம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

2015 நவம்பர் 24-ல் எழுதப்பட்ட இந்த கடிதத்தில், “ஐஎன்டி உறுப்பினர்கள் சார்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னொரு பக்கம் தனியாக ரபேல் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாங்கள் செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராக பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தை இருக்கிறது. இதனால் பாதுகாப்பு துறை இதில் தலையிட்டு, இந்த பிரதமரின் தனிப்பட்ட பேர பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமரோ அவரது அலுவலகமோ ஐஎன்டி குழுவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்துவது தவறானது. இது ஐஎன்டியின் விதி முறைக்கு எதிரானது. ஒப்பந்த விதிமுறைக்கு எதிரானது” என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த கடிதத்தின் கீழ் பகுதியில் வலது ஓரத்தில் கையெழுத்து துண்டானது பலரின் கண்ணையும் உறுத்தியது. இதன் உண்மை தன்மை பற்றி ஆராயும்போது தான், வேண்டுமென்றே சர்ச்சை உண்டாக்கும் வகையில் செய்தி வெளியிட வேண்டும் என்று, கடிதத்தின் பாதியை மறைத்து இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்திற்கு அளிக்கப்பட்ட பதில் கீழேயே இடம்பெற்றிருக்கிறது. அதனை மறைத்து செய்திகளை திரித்து வழங்கும் வேலையில் இந்து நாளிதழ் ஈடுபட்டது இதன் மூலம் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

இதனை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உணர்ச்சிவசப்பட்டு பேசியதை காணும் பொழுது, ஒரு செய்தியை பகுத்தறியும் தன்மை கூடவா தேசிய கட்சியை நிர்வகிக்கும் தலைவருக்கு இல்லை..? என்ற சந்தேகம் எழுகிறது.  தமிழகத்திலும் பெரும்பாலான செய்து ஊடகங்களில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான் பொறுப்பில் இருப்பர். இந்த பெரும் கூட்டமே இன்று நேற்று அல்ல காலம் காலமாகச் செய்தி துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள். இதன் பலத்துடன் அரசு பொது துறை நிறுவனங்களை நாசம் செய்தது போதாதென்று நாட்டின் பிரிவினைக்கும் மறைமுகமாக வேலை செய்வர்.

ஆகச் செய்தி நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களையும் சராசரி மீம்ஸ் கிரியேட்டர்களையும் பெரிய வித்தியாசம் பார்க்க தேவை இல்லை. உணர்வைத் தூண்டும் விதமாகச் செய்தி இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதை ஆராயும் அளவுக்கு எல்லாம் 99% பத்திரிக்கையாளர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட ஆர்வமோ அக்கரையோ இல்லை என்பது தான் உண்மை. அதை விட அசைக்க முடியாத உண்மை அவர்கள் பெரும்பாலும் சில அரசியல் கட்சிக்கு வேலை செய்கிறார்கள் எனவே தாங்கள் செய்தி வெளியிடுவதை விட தங்கள் எண்ணத்தை மக்களிடம் பரப்ப விரும்புகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.

Share