சட்டசபையில் நேற்று (பிப்.,11) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ₹2,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். சிறப்பு உதவித்தொகைக்காக ₹1,200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு பாரபட்சமில்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தமிழக அரசு ₹1,000 வழங்கியது. எந்தத வித புகாரும் இல்லாமல் தொகை பயனாளர்களுக்கு போய் சேர்ந்திருந்தாலும், முன்னதாக உயர் நீதிமன்றம் ஏழைகளுக்கு மட்டுமே இது போன்ற இலவசங்கள் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டும் ₹2,000 அறிவித்துள்ளது சாதாரண ஏழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share