தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த பா.ம.க பிரமுகர் ராமலிங்கம், கடந்த 5-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

திருநாகேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ள ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தரும் நிலையில் கடையடைப்பு போராட்டத்தால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதேபோல ராமலிங்கம் படுகொலையை கண்டித்து இந்து முன்னணியினர் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற இருந்த அமைதி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஊர்வலத்தில் பங்கேற்க சென்ற பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகளை மன்னார்குடி அருகே மேலப்பாலம் எனும் இடத்தில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது பா.ஜ.க-வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Share