அ.தி.மு.க-வை மிரட்டி தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க அடிபணிய வைத்துவிட்டது என்று தி.மு.க தலைவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நேற்று ஒரு திருமண நிகழ்வில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், “பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைப்பதற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மோடி அ.தி.மு.க-வினர் செய்த ஊழல்களை காட்டி கூட்டணிக்காக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அந்த மிரட்டலுக்குப் பயந்து கூட்டணிக்கு அ.தி.மு.க தயாராகி விட்டது” என்று பேசினார்.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த இல.கணேசன், “அரசியல் பற்றித் தெரியாதவர்கள் வேண்டுமானால் இதுபோலப் பேசலாம். சிறிய கட்சிகள் கூட அதாவது நாடாளுமன்றத்திலோ,  சட்டப்பேரவையிலோ அதிகமான உறுப்பினர்கள் அல்லது ஒரு உறுப்பினரும் இல்லாத கட்சியாக இருந்தாலும் கூட அந்தக் கட்சிகளை மிரட்டி கூட்டணி வைக்க முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று சுயமரியாதை, கவுரவம் இருக்கிறது” என்றார்.

Share