சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. கேரள கம்யூனிஸ்டு ஆட்சியினரின் வழக்கு தொடுப்பால் வரப்பெற்ற இந்த தீர்ப்பை எதிர்த்து கோவில் நிர்வாகத்தினரும், ஐயப்ப பக்தர்களும், கேரள பொதுமக்களும் சில மாதங்களாக போராட்டம் நடத்திவந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சபரிமலை பாதுகாப்பு சமிதியும், இந்து அமைப்புகளும், பா.ஜ.க, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின.    

இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில், தேவஸ்வம் போர்டு சார்பாக ஆஜரான வக்கீல் ராகேஷ்திரிவேதி கால அவகாசம் பற்றி பேசுவார் என்றே  தேவசம் போர்டும், பக்தர்களும், கேரள மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால்  ‘அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை ஏற்கிறோம்’ என, அவர் திடீர் என தெரிவித்ததால் இது குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேவஸம் போர்டு ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவஸம் போர்டு அனுப்பிய நோட்டீசால் கோபமடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை மாற்றிவிடவும் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தேவஸ்வம் போர்டு வக்கீலின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் பினராயி தலைமையிலான ஆட்சி கோவில் விவகாரத்தில் ரவுடித்தனமாக நடந்து கொள்வதும், கம்யூனிஸ்டுகளாலும், கம்யூனிஸ்டுகள் ஏவும் காவல் துறையினர் சிலராலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாக்கப்படுவதும், சபரிமலைப் பகுதி கலவரப்பகுதியாக மாறுவதும் மட்டுமல்லாமல் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதுடன் அவர்களின் வருகை குறைந்ததும் காரணம் என்றே கூறப்படுகிறது.

மார்க்சிஸ்டுகள் நடத்திவரும் இத்தகைய அட்டூழியங்களால் கவலையுற்ற போர்டு, சட்டசபை தேர்தல் வரும்வரை இந்த அட்டூழியங்களை பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகளை ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை பொறுத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் உச்ச நீதிமன்றத்துடனும் எதிர் போக்கை கடைபிடிக்காமல் தேவஸ்வம் போர்டு  வக்கீல் கால அவகாசம் எதையும் கேட்காமல் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

என்றாலும் வக்கீலின் இந்த செயல் முதல்வர் பினராயி விஜயனின் தூண்டுகோல்தான் எனவும், அவரின் மிரட்டலை அடுத்தே வக்கீல் திடீர் பல்டி  அடித்தார் எனவும் நம்பும் கேரள மக்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இருப்பதாகவும், எப்போது சட்டசபை தேர்தல் வரும், கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக்கு சங்கு ஊதலாம் என அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  

Share