சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவேசமாக உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு அரசு என்றால் அது இந்திய மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். ஊழலுக்கு இடம் தரக்கூடாது.நிறைய பேர் இந்த அரசை விமர்சிக்கலாம். ஆனால் சிலர் மட்டும்தான் மாற்றத்தை கொண்டு வருவதற்கான உறுதியை கொண்டுள்ளனர். எங்கள் ஆட்சியின் மீது (காங்கிரஸ் கட்சியினர்) குறை கூறினார்கள். ஆனால் அவை யாவும் அடிப்படை ஆதாரம் அற்றவை.
காங்கிரசில் உள்ள நமது நண்பர்கள் இந்தியாவை இரண்டு கால கட்டங்களாக பிரித்துப் பார்க்கிறார்கள். ஒன்று ‘பி.சி.’, அதாவது காங்கிரசுக்கு முந்தைய காலம். அப்போது எதுவுமே நடக்கவில்லை; ‘ஏ.டி.’, அதாவது குடும்ப ஆட்சி வந்தபின்னர்தான் எல்லாமே நடந்துள்ளது என்று காங்கிரசார் கருதுகிறார்கள்.

நாங்கள் சவால்களைக் கண்டு ஓடி விடவில்லை. நாங்கள் சவால்களை சந்திக்கிறவர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக முழு பலத்தையும் பயன்படுத்தி உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் லண்டனுக்கு போய் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக? இந்தியாவை மோசமாக காட்டுவதற்காக. மோடியை குறை கூறுவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் நீங்கள் அப்படி செய்கிறபோது சிலர் இந்தியாவை விமர்சிக்க தொடங்கி விடுவார்கள். எங்கள் ஆட்சிக்காலத்தில் முதலீடு, உருக்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பால், விவசாயம், விமான போக்குவரத்து என எல்லா துறைகளிலும் இப்போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 4 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தோல்வி அடைந்து விட்டு, அதற்கு மின்னணு வாக்கு எந்திரங்களை குறை சொல்கிறது. திட்டக் கமிஷனை கோமாளிகளின் கூட்டம் என்கிறார்கள். நீங்கள் (காங்கிரஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்தீர்கள். இந்திரா காந்தி இதை 50 முறைக்கு மேல் செய்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்தவர். ராணுவத்தின் கவுரவத்தை காங்கிரஸ் குலைத்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் நான் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நான், இன்றைக்கு அவர்களின் பரம்பரை ஆட்சிக்கு சவாலாக வந்து விட்டேன் என்பதுதான்.

மோடி மீது நீங்கள்ஆட்காட்டி விரலை நீட்டி குற்றம் சுமத்துவதற்கு முன்பாக உங்களை நோக்கித்தான் 4 விரல்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 55 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 12 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனால் 55 மாத எங்கள் ஆட்சியில் நாங்கள் 13 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளை தந்திருக்கிறோம். அவற்றில் 6 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் ஏழை -எளிய பெண்களுக்கு இலவசமாக தந்தவை என்பதை சொல்லிக்கொள்கிறேன். என்ன வேகத்தில் இந்த ஆட்சியில் வேலை நடந்திருக்கிறது, யாருக்காக இந்த வேலை நடந்திருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் (காங்கிரஸ்) மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். இந்த மெகா கூட்டணி, கலப்பட கூட்டணி.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகள் வழங்கப்படவில்லை. ஆனால் 2016-ல் நாங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கவச உடைகளை வழங்கி இருக்கிறோம். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில்கள் தொடங்குவதற்கு நாங்கள் ரூ.7 லட்சம் கோடி கடன்களை வழங்கி இருக்கிறோம்.இங்கு காமன்வெல்த் போட்டிகள் நடந்தபோது, நமது நாட்டின் பெருமையை முன்னிலைப்படுத்துவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் (காங்கிரஸ்) அதிலும் தங்கள் சொத்துக்களை அதிகரிப்பதில் கவனத்தை செலுத்தினார்கள்.
அவர்கள் ஆட்சிக்காலத்தில் தொலைபேசியில் பேசி வங்கிக்கடன்களை கொடுக்க வைத்தார்கள். யாருக்கு என்றால் அவர்களின் தலைவர்களின் நண்பர்களுக்கு. அதனால்தான் நமது வங்கி முறையே பெரும் பிரச்சினைகளை சந்தித்தது. நாங்கள் யாருக்கும் சாதகமாக அப்படி நடக்கவில்லை. ஊழல்வாதிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

ரபேல் போர் விமான பேரத்தை பொறுத்தமட்டில் அவர்கள் நம்பிக்கையுடன் பொய் சொல்கிறார்கள். கடந்த 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்த பேரமும் இடைத்தரகர் இன்றி நடந்தது இல்லை என்ற உண்மையை அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
நமது விமானப்படை பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை என்பதை இந்த நாடாளுமன்றத்தில் நான் சொல்லிக்கொள்கிறேன். ரபேல் பேர விவகாரத்தில் காங்கிரஸ் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்திருக்கிறார்.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 லட்சம் மோசடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
விலைவாசி உயர்வும், காங்கிரசும் ஒரே அணியில் இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறபோது, விலைவாசியும் கூடவே உயரும். ஆனால் பாரதீய ஜனதா கூட்டணி அரசு விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்கு உழைத்திருக்கிறது. எங்கள் அரசு நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் உழைத்து இருக்கிறது. இதயத்தில் பொருத்துகிற ‘ஸ்டெண்டு’களின் விலைகள், மருந்து விலைகள் குறைந்து இருக்கின்றன. இது நாட்டின் ஏழை-எளிய மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளது.

எங்கள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் குறை கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அமைப்பு சாராத துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. போக்குவரத்து துறையில் அதிகபட்ச வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.சர்வதேச அரங்கைப் பொறுத்தமட்டில் இந்தியா என்ன சொல்கிறது என்றுதான் இன்றைக்கு கேட்கிறார்கள். பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக உலக தலைவர்கள் இந்தியாவுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். நாட்டை கொள்ளையடித்தவர்கள், நரேந்திர மோடிக்கு தொடர்ந்து பயந்துதான் ஆக வேண்டும் என்பதை உங்களுக்கு உறுதிபட சொல்லிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Share