திருப்பூருக்கு பிரதமர் மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவினர் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தினர். வைகோ ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பா.ஜ.க மகளிரணி நிர்வாகி சசிகலா என்பவர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வழியாக செல்லும்போது “பாரத் மாதா கி ஜே” என முழக்கமிட்டவாறே சென்று கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ம.தி.மு.க கட்சி தொண்டர்கள், பெண் என்றும் பார்க்காமல் அப்பெண்மணி மீது தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.  

ம.தி.மு.க-வினர் சசிகலாவை கம்பால் தாக்கியதாகவும், இதில், சசிகலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், போலீசார் அங்கு வந்து சசிகலாவை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க செயலர் கே.டி.ராகவன் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து  கே.டி. ராகவன் தெரிவித்துள்ளதாவது: 

“இன்று திருப்பூரில் பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க மகளிரணி பொறுப்பாளர் சகோதரி சசிகலா அவர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய மதிமுக குண்டர்களை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. சசிகலா அவர்களை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கலவரத்தை தூண்டிய வைகோவை காவல்துறை உடனடியாக வைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வைகோவின் அநாகரீகங்கள் தொடருமானால் வைகோ தமிழக அரசியலிலிருந்து  துடைத்தெறியப்படுவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் வைகோ போன்ற சமூக விரோதிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு கே.டி.ராகவன் கூறியுள்ளார்.  

Share