திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட பணிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

பிரதமர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் வந்திறங்குவதற்காக 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதற்காக ஒரு மேடை அமைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்துக்காக மற்றொரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அமருவதற்கான இடங்கள் என அனைத்து பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் பல தலைவர்கள், அரசு அதிகாரிகள் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மைதானத்தில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு போலீஸ் குழுவினர், வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் பொதுக்கூட்டம் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல், பாரத பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், ட்விட்டரை தெறிக்க விட ஆரம்பித்துவிட்டனர் தமிழர்கள். #TNWelcomesModi என்ற ட்விட்டர் ட்ரெண்டிங் இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Share