கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணாவில் ஈடுபட்ட ஒரே முதலமைச்சர் மம்தா தான் என பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். குறிப்பாக, ஃபலகாடாவிலிருந்து, சல்சலாபரி வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லையும், ஜல்பைகுரியில் நடைபெற்ற உயர்நீதிமன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சாரதா நிதி நிறுவனமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு, மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்திய வரலாற்றில் முதல் முறையாக, கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணாவில் ஈடுபட்ட ஒரே முதலமைச்சர் மமதா தான் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் மேற்கு வங்காளத்தில், வடக்குப்பகுதியில் ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும், தேயிலை சார்ந்த தொழில்கள், சுற்றுலா மற்றும் மரங்கள் சார்ந்த தொழில்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நிதி மோசடி செய்த கும்பலிடமிருந்து பல கோடிகள் பெற்றுக் கொண்டு அவர்களைக் காப்பாற்ற முயன்றதுடன், ஊழல் தொடர்பான பல தஸ்தாவேஜுகளை மறைத்த கொல்கத்தா நகர கமிஷனரை விசாரிக்க சென்ற சி.பி.ஐ போலீசாரை கைது செய்ததும் இல்லாமல், கமிஷனரை பாதுகாக்க மம்தா தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share