திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட பணிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

பிரதமர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் வந்திறங்குவதற்காக 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதற்காக ஒரு மேடை அமைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்துக்காக மற்றொரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அமருவதற்கான இடங்கள் என அனைத்து பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் பல தலைவர்கள், அரசு அதிகாரிகள் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மைதானத்தில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு போலீஸ் குழுவினர், வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் பொதுக்கூட்டம் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதையும் சோதனையிட்டு வருகின்றனர்.

பிரதமர் வந்து செல்லும் பயண திட்டங்கள் விவரங்கள்:

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.55 மணிக்குப் புறப்படும் பிரதமர் மோடி 2.35 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இதையடுத்து, ஹெலிகாப்டரில் 2.40 மணிக்குப் புறப்பட்டு 3.05 மணி அளவில் பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்குப் பிரதமர் வருகிறார். பின்னர், 3.15 மணி அளவில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை காணொலிக்காட்சி மூலமாகத் தொடங்கிவைக்கிறார்.  இதன் பிறகு, 3.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு 3.30 மணி அளவில் செல்கிறார். அங்கு சிறப்புரையாற்றிய பின், 4.20 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 4.55 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இதையடுத்து, 5.10 மணிக்குத் தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி தில்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூரில் கடந்த வியாழக்கிழமை முதல் முகாமிட்டுள்ளனர். மேலும், விழா மேடை, ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு சோதனையிலும் இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 2,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 


Share