உத்தர பிரதேசத்தில் சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அவர் உரையாற்றி முடிந்ததும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால், 2019 – 2020-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பட்ஜெட்டில் ₹101 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கங்கை நதிக்கரையில் இருந்து வாரணாசியில் உள்ள விஸ்வநாத் கோவில் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்து அழகுபடுத்தும் திட்டத்திற்கு ₹207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், வாரணாசி, மதுரா, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகளை மேம்படுத்துவதற்கு ₹3522 கோடி, புதிய அதிவிரைவு சாலைகள் அமைக்க ₹3194 கோடி, பொதுப்பணித் துறையின் கீழ் சாலைகள் அமைக்க ₹13,135 கோடி, பாலங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ₹2100 கோடி என பல்வேறு திட்டப்பணிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Input Credits – Times of India

Share