காங்கிரசால் கடந்த 55 ஆண்டுகளாக செய்ய முடியாததையும், கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் 55 மாதங்களில் திட்டமிட்டு, விரைவாக தங்கள் அரசு செய்து முடித்துள்ளது என்றும் இந்த பணிகளை காங்கிரஸ் தாங்கள் உறுதி அளித்தவாறு செய்து முடித்திருந்தால் எனது நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் மேலும் நிறைய சாதிதிருப்போம் என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசினார். சுமார் இரண்டரை மணி நேரம் அவர் உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: 

ஊழல் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்; எதிர்க்கட்சிகள் இணைந்து அமைப்பது மகா கூட்டணி அல்ல, கலப்படக் கூட்டணி “ரபேல் போர் விமான கொள்முதல் விஷயத்தை வைத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டுவதை விமர்சித்த மோடி, இந்திய ராணுவம் பலமாக இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

எங்கள் ஆட்சியில் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, நாங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறோம். நாடாளுமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் சரி வாய்மையுடன் செயல்படுகிறோம். ஆனால், உங்களிடம் (எதிர்க்கட்சிகள்) உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ளும் திறன் குறைந்துவிட்டது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நமது ராணுவத்தை பலவீனமான நிலையில் விட்டுச் சென்றனர். துல்லியத் தாக்குதல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமை இல்லாமல் இருந்தது. வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகளைக் கூட அவர்கள் சரியாக வழங்கவில்லை. ஆனால், நாங்கள் ராணுவத்தை வலிமைப்படுத்தியுள்ளோம். நமது விமானப் படை வலிமையுடன் திகழ்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. இதனை மிகவும் கடுமையான குற்றச்சாட்டாகவே நான் முன்வைக்கிறேன். ரபேல் விமான ஒப்பந்தம் ரத்தாக வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது. இதனை யாருக்காக? எந்த நிறுவனத்துக்காக அவர்கள் செய்கிறார்கள்? என்று மோடி கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியை விமர்சித்த மோடி, ஊழல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்தும் கலப்படக் கூட்டணி மக்களுக்குத் தேவையில்லை. அதனை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். முழுப் பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றும் என்பதை இப்போதைய பாஜக கூட்டணி ஆட்சி மூலம் நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர். கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த கலப்படக் கூட்டணி (எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்), மக்களுக்குத் தேவையில்லை என்றார்.

வங்கிக் கடன் மூலம் மக்கள் பணத்தை சிலர் கொள்ளையடிக்க காங்கிரஸ் ஆட்சியில் அனுமதித்தார்கள். ₹9,000 கோடி (மல்லையா), ₹13,000 கோடி (நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி) கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இப்போதைய, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் அவர்கள் பதுங்குமிடத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை காங்கிரஸ் கட்சி பலமுறை தவறாகப் பயன்படுத்தியது. நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதும், நீதித்துறையை கேள்விக்குள்ளாக்குவதும், திட்டக்குழுவை நகைச்சுவையாளர்கள் குழு என்று கூறியதும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், மோடிதான் அதனைச் செய்கிறார் என்று விமர்சிக்கின்றனர்.

ராணுவத் தளபதியை குண்டர் என்றதும், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல மாநில அரசுகளை கலைத்ததும் காங்கிரஸ் கட்சிதான். இதில் என்னுடைய குற்றம் என்ன? ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இவர்களுடைய (காங்கிரஸ்) வாரிசு அரசியலை எதிர்ப்பதுதான் எனது தவறா? என்றார் மோடி.


நமது தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், அப்போது அவரது வார்த்தைப்படி யாரும் நடக்கவில்லை. எனினும், இப்போது காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கும் வகையில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. மகாத்மாவின் கனவை பா.ஜ.க நிறைவேற்றும்.

நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தியது முதல், உள்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளித்தது வரை, பல சாதனைகளை மத்திய அரசு படைத்துள்ளது; 

கடந்த 2014 ஆம் ஆண்டு வரை அடிப்படை சுகாதாரத் திட்டத்தின் கீழ் காங்கிரசார்  ஆட்சியில் 40% கழிவறைகள் மட்டுமே இருந்தன. 55 ஆண்டுகால ஆட்சியில் இதைத்தான் அவர்களால் செய்ய முடிந்தது. ஆனால் எங்களது 55 மாத ஆட்சியில் 10 கோடி கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளோம். 98% சதவீத பணிகளை முடித்துள்ளோம். ஆனால் எங்களது ஆட்சியைப் பார்த்து பணக்காரர்களின் ஆதரவு ஆட்சி என்று பழி சுமத்துகிறார்கள். எங்களால் கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பெற்ற பொது மக்களை அவர்கள் பணக்காரர்கள் என்று சொன்னால் எனக்கு சந்தோஷம்தான். அவர்களுடைய 55 ஆண்டுகால ஆட்சியில் 12 கோடி மக்கள் மட்டுமே சமையல் எரிவாயு பயன்படுத்தினார்கள். ஆனால் எங்களது 55 மாத ஆட்சியில் மட்டும் 13 கோடி சமையல் எரி வாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். 

நாங்கள் வெகு வேகமாக செயல்பட்டதால்தான் நாட்டிலுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.  காங்கிரசார் ஒவ்வொரு தேர்தலிலும் “வறுமையை ஒழிப்போம் நாட்டை காப்போம்” என கோஷமிட்டே அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றினீர்கள். நீஎண்கள் வாக்குறுதி அளித்ததில் கொஞ்சமாவது செய்திருந்தால் எனது காலத்தில் என்னால் இன்னும் மக்களுக்கு நிறைய செய்திருக்க முடியும். 2004, 2009 மற்றும்  2014 தேர்தல்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் மின்சாரத்தட்டுப்பாட்டை போக்குவோம் என்று தேர்தல்  வாக்குறுதியளித்தீர்கள். ஆனால் ஒரு முறையாவது உங்களால் அதை செய்ய முடிந்ததா? ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பிரச்சினைகளை நீக்கி இன்று மின்சாரம் தேவை தன்னிறைவு பெற்றுள்ளது. 

வெளிநாட்டு விவகாரங்களிலும் எங்கள் ஆட்சி மிகவும் சாதுர்யமாக உறவுகளை கையாண்டு வருகிறது. வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரையில், ஒன்றுக்கு மற்றொன்று எதிரி நாடுகளாகக் கருதப்படும் இஸ்ரேல்-பாலஸ்தீனம், சவூதி அரேபியா-ஈரான் என அனைத்து நாடுகளுடன் சிறப்பான நட்புறவை நாம் பேணி வருகிறோம் என்றார் மோடி. 

Share