ஜெயலலிதா மறைந்துவிட்டால் அத்துடன் அ.தி.மு.க என்ற கட்சியும் ஒழிந்து விடும், ஆட்சியும் ஒழிந்து விடும் போட்டியில்லாமல் நமக்குப்பிறகு மகன்களும், மகள்களும், பேரன்களும் சுபீட்சமாக ஆண்டு வருவார்கள் என்று தாத்தா போட்ட கணக்கை முறியடித்து அ.தி.மு.க-வை பா.ஜ.க காப்பாற்றி வருவதாக பெரும்பான்மையான மக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் கருதி வரும் நிலையில், நிச்சயமில்லாத சிறுபான்மை வாக்குகளை நம்பி பா.ஜ.க ஆதரவை இழந்துவிட வேண்டாமென்றும், சிறுபான்மையினர் வாக்குகளின் இழப்பை பா.ஜ.க-வின் வாக்கு வங்கியும், கிடைக்கவுள்ள புதிய வாக்குகளும் சரி கட்டுமென்றும், இதனால் குறைந்த பட்சம் 60 சதவீத இடங்களுக்கு மேல் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என்றும் தமிழ் – தேசிய அரசியல் சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க தொண்டர்களின் மன நிலையும் இப்படித்தான் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.       

அவர்கள் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அ.தி.மு.க மதிப்புடன் உள்ளது என்பதை அக்கட்சியினர் நன்றாகவே உணர்ந்துள்ளனர். பல நெருக்கடிகளுக்கு இடையிலும் அ.தி.மு.க அரசு நீடிக்க பிரதமர் மோடியினால் வழிகாட்டப்படும் பா.ஜ.க-வே காரணம் என்பதையும் அவர்கள் உணர்ந்தே உள்ளனர். தினகரன் அ.தி.மு.க-வைப் பிளந்த போது அ.தி.மு.க அரசு கவிழாமல் காத்தது மத்திய அரசே எனவும் கூறுகின்றனர். இன்றைக்கு அ.தி.மு.க-வினர் ஆட்சியாளர்களாக, கம்பீரமான கார்களில், தங்கள் தலைவியின் படத்தை ஒட்டிக் கொண்டு அதிகார பவனி வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான் என்றும் தங்கள் கட்சியின் சின்னம் இரட்டை இல்லை இன்றும் காயாத பசுமை இலைகளாக இருப்பதற்கு பா.ஜ.க தான் காரணமென்றும் அ.தி.மு.க தொண்டர்கள் பரவலவாக பேசி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்த பிறகும் அ.தி.மு.க-வின் செல்வாக்கை தி.மு.க-வால் அசைத்து பார்க்க முடியாததற்கு மோடிதான் காரணம் எனவும் பரவலான ஒரு அபிப்பிராயம் அ.தி.மு.க தொண்டர்களிடையே காணப்படுகிறது. மோடி இடத்தில்  இந்நேரம் காங்கிரசார் இருந்திருந்தால் அ.தி.மு.க-வையும் அதன் ஆட்சியையும் தி.மு.க எப்போதோ சின்னாபின்னமாகி இருக்கும் என்றும் தொண்டர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நேரம் நாமே முதல்வராக இருந்திருக்கலாம், ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்கிறாரே மோடி என்று நொந்து போன ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதைக் கொண்டு அ.தி.மு.க ஆட்சியை நிச்சயம் கவிழ்த்து விட்டு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் செலவு செய்யாமலேயே முதல்வர் ஆகிவிடலாம் எனவும் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை நம்மை காப்பாற்றி வரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக துணிந்து அ.தி.மு.க தலைமை தேர்தல் களத்தில் இறங்கிவிடுவதுதான் நல்லது என அ.தி.மு.க-வின் அனைத்து மட்ட தொண்டர்களும், மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியை விரும்பும் மக்களின் கருத்தாகவும் உள்ளது எனக் கூறப்படுகிறது.    

ஆனால் இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நன்றாகவே தெரியும் என்றும் பா.ஜ.க-வுடன் சேர்வதால் சிறுபான்மையினரின் வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்காதோ என்பதே அவர்களது கவலை எனவும் கூறப்படுகிறது. அவர்கள் இதுதொடர்பாக கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதே உண்மை நிலவரம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, எப்போது எடப்பாடி பழனிசாமி அரசை பா.ஜ.க தாங்கிப் பிடித்ததோ, அன்று முதலாகவே பா.ஜ.க-வால் காப்பாற்றப்படும் அரசு என்றுதான் அ.தி.மு.க அரசு பெயர் பெற்றிருக்கிறது. இதனால் புதிதாக ஒரு பழியும் சேரப் போவதில்லை.

அதே சமயம் சிறுபான்மையினரின் வாக்குகள் முன்பை போலவே அ.தி.மு.க-வுக்கு கிடைக்கும் என்று கூற முடியாது. அதிகபட்சமாக சிறுபான்மையினர் வாக்குகள் என்பது 7 சதவீதத்துக்கும்  குறைவாகத்தான் இருக்கும். சில தொகுதிகளில் அது கூடுதலாக இருக்கும். தற்போதுள்ள நிலையில் தி.மு.க-வுக்கு அதிக சிறுபான்மை வாக்குகள் போக வாய்ப்புண்டு. அதே சமயம் தினகரன் தனித்து நின்றால் அவருடைய புதிய கட்சிக்கும் சிறுபான்மை வாக்குகள் பிரிய வாய்ப்புண்டு. அ.தி.மு.க-வுக்கும் ஒரு பகுதி சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் என்றாலும் சிறுபான்மை வாக்குகள் குறையும் பட்சத்தில் அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு தொகுதியிலும் ஏற்கனவே உள்ள பா.ஜ.க அனுதாபிகள், மோடியின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வாக்குகள், இந்து அமைப்புகள் தொடர்புடைய வாக்குகள் சரிகட்டும்.

ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க-வுக்கு தற்போதைய நிலையில் குறைந்த பட்சம் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றபோது சராசரியாக 2.86 சதவீதம் கிடைத்தது என்றாலும் அக்கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலமானவர்கள் நின்ற தொகுதிகளில் 10 சதவீதம் வரை வாக்குகள் கிடைத்தன.  தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்ததால் காங்கிரசுக்கு 6.47 சதவீத வாக்குகள் மட்டுமே  கிடைத்தன. மற்றபடி இந்திய முஸ்லிம் ஒன்றியம், தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, வைகோ கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பா.ஜ.க-வை விட மிகக் குறைந்த வாக்குகள் பெற்றன. பல தொகுதிகளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும் அதிக பட்சமாக 30 ஆயிரம் வாக்குகள் வரையிலும் பா.ஜ.க-வுக்கு வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தேர்தலில் மோடி ஆட்சியால் கிடைக்கப்பெற்ற பொது பலன்களால் வாக்களிப்பவர்களும் உண்டு. சமூக குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், லஞ்சம், ஊழலுக்கு எதிராக மோடி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புண்டு. அ.தி.மு.க என்ற கட்சிக்காக அல்லாமல் ஜெயலலிதாவுக்காகவே வாக்களித்தவர்களும் இலட்சக்கணக்கானவர்கள் உண்டு. அவர்களின் வாக்குகள் இந்த முறை என்றில்லை அந்த வாக்குகள் எப்போதும் இனி தாமரைக்குதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அ.தி.மு.க அரசு மீது பெருமளவிலான ஊழல் புகார்கள் எழாததன் காரணமும் அது மோடியின் ஆதரவு பெற்றிருப்பதால்தான் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றி முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு இம்முறை அ.தி.மு.க-வுக்கு கிட்டியுள்ளது! தவிர, ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை இல்லாத குறையைத் தீர்க்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழரான மோடியின் பிராபல்யம் அ.தி.மு.க-வுக்கு உதவ வாய்ப்புள்ளது. எனவே அ.தி.மு.க- கூட்டணி அமைந்தால், முதல் சாதகம் அ.தி.மு.க-வுக்கே. இதையெல்லாம் அ.தி.மு.க தலைமை கருத வேண்டும்.

நடக்கப்போவது நாடாளுமன்ற லோக்சபை தேர்தல். சென்ற லோக்சபை தேர்தலில் “மோடியா, லேடியா?” என்ற ஒற்றைக் கேள்வியுடன் தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க 37 இடங்களில் வென்று காட்டியது, மீதமுள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிதான்  வென்றது. உண்மையில் அது நட்புரீதியான போட்டியாகவே அமைந்திருந்தது. அதில் தி.மு.க கூட்டணி காணாமல் போனது. ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.

இம்முறை ஜெயலலிதா இல்லாத நிலையில், மோடி அரசு மேற்கொண்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி, தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை பிரசாரம் செய்து மக்களை எளிதாகச் சந்திக்க முடியும். அ.தி.மு.க நினைப்பதுபோல அல்லாமல், இத்தேர்தல் பா.ஜ.க-வை விட அ.தி.மு.க-வுக்கே மிகவும் தேவையாக உள்ளது. ஏனெனில் ஒருவேளை மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாவிட்டால் கூட அந்த கட்சி தேசிய அளவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. சக்தியுள்ள எதிர்கட்சியாக வர வாய்ப்புள்ளது. தனது தனிப்பெரும் செல்வாக்கைக் கொண்டே ஆளும் கட்சியை கட்டுப்படுத்தும் சக்தியை பெற அந்த கட்சிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அ.தி.மு.க தனது நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். சிறுபான்மை வாக்குகளை அரசனாக கருதி புருஷனை கைவிட வேண்டாம் என்பது தான் தேசிய – மாநில நலன் விரும்பும் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தாகவும், அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.

இந்நேரம் மோடிக்கு பதிலாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அ.தி.மு.க அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போது கூட, “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அ.தி.மு.க அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்” என்று ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது. அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டால் குறைந்தபட்சம் 60 சதவீத இடங்களில் நிச்சயமாக வெல்ல முடியும். அ.தி.மு.க தலைவர்கள் நல்ல முடிவு எடுக்க, ஜெயலலிதாவின் ஆன்மா ஆசி அளிக்கும் என்று நம்பலாம்.

Selective Inputs from – Tamil The Hindu

Share