மத்திய அரசின் ஒத்துழைப்புடன் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி, தமிழகத்துக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வருவோம் என விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தை திறந்து வைத்து பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். 

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் ₹1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியது:
1957-இல் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட 16 மணி நேர மின்சாரத்தை 4 மணி நேரமாகக் குறைத்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் நாராயணசாமி நாயுடு, விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.
2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, தமிழக அரசு சார்பில் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, போராட்டங்களில் உயிரிழந்த 40 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கோதாவரி – காவிரி இணைப்பு

கோதாவரியில் உற்பத்தியாகும் நீரில் 2,500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.  இத்திட்டத்தை நிறைவேற்றி தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் வழியாக தமிழகத்துக்கு 200 டி.எம்.சி. தண்ணீரைக்  கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. 
சில ஆண்டுகளில் பருவ மழை பொய்க்கும்போது, டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 20 மாவட்டங்களுக்கு காவிரிதான் குடிநீர் ஆதாரம். பல்வேறு காலகட்டங்களில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் காய்ந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றார்

Share