ஈரோடு மாவட்டத்தில் 2,907 கிராமங்களில் “உங்கள் வாயிலில் காவல் சேவை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்ட அறிவிப்பில், காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் எவ்வித சிரமமின்றி நிலையத்துக்கு உள்ளே வர ஏதுவாக 16  காவல் நிலையங்களில் சாய்தளப் பாதை அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், 20 காவல் நிலையங்களில் சாய்தளப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்  உங்கள் வாயிலில் காவல் சேவை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகர கோட்டத்தில் 246 கிராமங்களும், பவானி உள்கோட்டத்தில் 637 கிராமங்களும், கோபி உள்கோட்டத்தில் 693 கிராமங்களும், ஈரோடு ஊரக உள்கோட்டத்தில் 932 கிராமங்களும், சத்தி உள்கோட்டத்தில் 399 கிராமங்களும் என 2 ஆயிரத்து 907 கிராமங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அந்தந்த கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்குச் சென்று  பொதுமக்களிடம் அவர்களுக்கான பிரச்னை குறித்து கேட்டறிந்து மனுக்களாகப் பெற்று காவல் துறை நீங்கலாக, மற்ற மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி அந்த துறை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. விபத்து, மகப்பேறு, வேறு ஏதேனும் காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களை சரியான நேரத்தில் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வகையில் 108 அவசர ஊர்திக்கு வழிவிடும் நோக்கில் அதிவிரைவு வழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம், விபத்து குறித்து 108 ஊர்தி கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்தவுடன், விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்று பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு சேர்க்க இத்திட்டம் பேருதவியாக இருந்து வருகிறது என்றார்.

Share