மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் கே.குல்சிரேஷ்டா தெரிவித்தார். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவரிடம் சேலம் கோட்ட ரயில்வே ஆலோ சனைக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுபாளையத்தில் இருந்து கோவை வழித் தடத்தில் தினமும் 8 முறை 11 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் சென்று வருகிறது. இதில் தினமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகரித்துள்ளதால் தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 12 முறை 12 பெட்டிகளுடன் மெமோ ரயில் எனப்படும் பயணிகள் ரயில் இயக்க வேண்டும். வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாள்கள் இயக்கப்படும் கோவை – மேட்டுப்பாளையம் இடையேயான பயணிகள் ரயிலை ஞாயிறுக்கிழமையும் தொடர்ந்து இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிழற்கூரைகள் ரயிலின் 11 பெட்டிகள் வரை மட்டுமே உள்ளன. 

இதனை ரயிலின் 23 பெட்டிகள் வரை அமைக்க வேண்டும். இங்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா பதிலளிக்கையில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பயணிகள் மெமோ ரயில் விரைவில் இயக்கப்படும். அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share