கோவை மொப்பிரிபாளையம் பகுதியில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்க முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிறு தொழில்கள் மற்றும் கொடிசியா இண்டஸ்ட்ரியல் தொழிற்பூங்கா நிறுவனம் இணைந்து பூங்கா அமைகிறது. கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

கோவையின் புறநகர் பகுதிகளான மோப்பிரிப்பாளையம் மற்றும் கள்ளப்பாளையம் பகுதிகளில் தயாராகி வரும் கொடிசியா தொழிற்பூங்காவின் கட்டுமான பணிகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
மோப்பிரிபாளையத்தில், 260 ஏக்கரிலும், கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கரிலும் தொழிற்பூங்காவுக்கான பணிகள் நடந்து வருகின்றன. நிலம் சமன்படுத்தப்பட்டு, சாலைகள், சாக்கடைகள், தெரு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு, கட்டுமானப்பணிக்கு தயாராக உள்ளது. இங்கு அமையவுள்ள, 600 புதிய நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சமீபத்தில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் துறை உள்கட்டமைப்பு திட்டங்களை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருச்சியில் துவக்கி வைத்தார். அப்போது, ராணுவ தளவாட பொருட்களை மேம்படுத்தும் வகையில், கொடிசியா ‘டிபென்ஸ் இன்னோவேஷன்’ மற்றும் ‘இன்குபேஷன் சென்டர்’ கோவையில் அமையவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

அந்த மையமும், கொடிசியா தொழிற்பூங்காவில் அமையவிருக்கிறது. இந்த நிலையில், இன்று கோவை வந்த தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், மோப்பிரிப்பாளையத்தில், கொடிசியா தொழிற் பூங்காவின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டிதுவக்கி வைத்தனர். கட்டுமானப் பணிகள் துவங்க இருப்பதால், விரைவில் அங்கு தொழிற்சாலைகள் உருவாகி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Share