கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன கிராம வங்கிகள். சிறு, குறு கடன் உதவிகளில் துவங்கி அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் நிதி உதவியை கிராமப்புற மக்கள் பெறுவதற்கு இந்த கிராம வங்கிகள் உதவுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள இரண்டு கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு கிராம வங்கி என்ற கிராம வங்கியை உருவாக்க மத்திய நிதி அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இரண்டு கிராம வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒன்றிணைக்கப்பட்ட வங்கிக்கு தமிழ்நாடு கிராம வங்கி என்ற புதிய பெயரை அறிவித்துள்ளது.

இந்தியன் வங்கியின் நிதியுதவியில் இயங்கும் பல்லவன் கிராம வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிதியுதவியில் இயங்கும் பாண்டியன் கிராம வங்கி ஆகிய இரண்டு கிராம வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன.

தமிழக கிராம வங்கியின் புதிய நிறுவனம், இந்திய வங்கியின் நிதியுதவியில் இயங்கும். சேலத்தில் அதன் தலைமை அலுவலகம் இருக்கும். இணைக்கப்பட்ட இந்த புதிய கிராம வங்கி ஏப்ரல் 1, 2019 முதல் செயல்பட துவங்கும்.

தமிழ்நாடு கிராம வங்கி சுமார் ₹21,000 கோடி வியாபாரத்தை கொண்டு, 625 கிளைகளில், மாநிலம் முழுவதும் 800 வணிக நிர்வாக அலுவலகங்களை கொண்டு இயங்கும். இந்த நன் முயற்சியின் மூலம், தமிழக கிராமப்புற ஏழை மக்களின் நிதி தேவைகளுக்கு எளிதில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share