மேற்கு வங்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சியில் சாரதா சீட்டு நிறுவனம் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் இலட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் அனைவரும் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என்பதால் மம்தா இந்த வழக்கை மூட முயல்வதாக அப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பல்வேறு எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டின.  

2013-ல் வெளிவந்த நாட்டையே உலுக்கிய இந்த மோசடி சம்பவம் சுப்ரீம் கோர்ட் தலையீட்டுக்கு பின்னரே வெளி உலகிற்கு தெரிய வந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 2013-ல் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த விசாரணை துவங்கியது. ஆனால் மம்தாவின் தலையீடு காரணமாக பல ஆவணங்கள் மறைக்கப்பட்டதால் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. அப்போது இது தொடர்பாக விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இப்போதைய கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மம்தாவுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் உட்பட பல எதிர்கட்சிகள் சாரதா சிட் பண்டு விவகாரத்தில் மம்தாவால் ஏற்படும் இடைஞ்சல்களை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினர். இதை அடுத்து உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சாரதா சீட்டு மோசடி வழக்கு அப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்குத் தொடர்பான ஒரு சில சான்றுகள் காணாமல் போனதை அடுத்து அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்ற வாரம் ராஜீவ்குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து ஆஜராகாத ராஜீவ்குமாரை வீடு புகுந்து கைது செய்ய சி.பி.ஐ அதிகாரிகள் முயன்றனர்.

இந்த நிலையில் பதிலடியாக மேற்கு வங்கக் காவல்துறையினர் சி.பி.ஐ அதிகாரிகளைக் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவும், வழக்குத் தொடர்பான சான்றுகளை ஒப்படைக்கவும ராஜீவ்குமாருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய மடிக்கணினிகள், செல்பேசிகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரி, முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிதி மோசடி செய்தவர்களிடமே கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியது, சான்றுகளைக் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் ஒப்படைத்தது, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றும் முன் சான்றுகளை அழிக்க முயன்றது ஆகிய சதிச்செயல்களில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கும், இராஜீவ் குமாருக்கும் தொடர்பு இருப்பது, விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காதது தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசின் உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரியுள்ள மனுவுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மேற்கு வங்கத் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜீவ்குமார் மேகாலயத்தின் சில்லாங்கில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். ராஜீவ் குமாரை விசாரிக்கலாமே ஒழியக் கைது செய்யக் கூடாது என்றும் சி.பி.ஐ-க்கு அறிவுறுத்தியதுடன் விசாரணையை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான கோடி செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் கொல்கத்தா கமிஷனர் இராஜீவ் குமாருக்கு ஆதரவாக அவரைக் காப்பாற்ற போராட்டம் நடத்திவரும் மம்தாவுக்கு எதிராக கொல்கத்தாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் மம்தா அரசுக்கு எதிராக கோர்ட்டால் அனுப்பப்பட்ட அவமதிப்பு நோட்டீஸ் மற்றும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணை ஆகியவை மம்தாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு என கூறப்படுகிறது. 

Share