கனடா சென்ற தமிழ் திரையுலக இசை அமைப்பாளர் இமான் அங்குள்ள தமிழர்கள் நடத்திய மரபு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு டொராண்டோ பல்கலைக் கழகம் விருது வழங்கி கவுரவப்படுத்தியது.

கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம்.  இந்தப் பல்கலைக்கழகம் முதன் முறையாக 21 ஜனவரி மாலை அன்று தமிழ் மரபுத் தினத்தை கொண்டாடியது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.

மரபு தினக் கொண்டாட்டத்தின்போது பிரபல இசையமைப்பாளர் டி.இமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவிலே அவர் இசையமைத்த டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை  வெளியிட்டார். பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. பாடியவர் சுப்பர் சிங்கர் புகழ் திவாகர். அதே பாடலுக்கு நிரோதினி நடனப் பள்ளி மாணவிகள் நடனமாடியது மேலும் சிறப்பாக அமைந்தது. விழாவில், ‘அண்ணன்மார் கதை‘ வில்லுப்பாட்டும் வேறு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இமானை வரவேற்று டோரண்டோ பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி  பேசினார். மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழும் கனடாவில் உருவாகும் தமிழ் இருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன்  தமிழின் மேன்மையை அனைத்துலக மக்களுக்கும் கொண்டு செல்லும் என்று கூறினார். தொடர்ந்து இமானுடைய இசையையும் தமிழ் சேவையையும் பாராட்டி விருது வழங்கினார்.

Share