சிறப்பு கட்டுரைகள்

கார்கில் வெற்றிக்கு வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

கார்கில் போரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வாஜ்பாய்க்கு உதவிய முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இன்று(ஜனவரி 2019, 29-ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் தொழிற்சங்க தலைவராக இருந்து நாடு முழுவதும் பலரை கவர்ந்தார். இந்திரா காந்தி எமர்ஜென்ஸி அறிவித்த போது கடுமையாக எதிர்த்தார். 1976-ல் இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலை பிரகடன காலத்தில் பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெர்னாண்டஸ் சிறை வாசத்தை அனுபவித்தார். இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையை கடுமையாக எதித்தவர்களில் பெர்னாண்டஸ் ஒருவர். அவசர நிலைக்கு பிறகு மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசில் 1977-ல் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது இவர் எடுத்த நடவடிக்கையால், கோகோ கோலா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

சிறந்த ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சாளரான இவர் பிறகு 1989 முதல் 1990 வரை வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் 1998 – 2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்த போதுதான் கார்கில் போர் நடந்தது. பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தவர் பெர்னாண்டஸ். ராணுவ அமைச்சராக இருந்த பொழுது, சியாச்சின் போர்க்களத்திற்கு 18 முறை சென்று ஆய்வு மேற்கொண்டார்.

1999-ல் வாஜ்பாய் அரசு 13 ஓட்டு எண்ணிக்கையில் கவிழ்க்கப்படுக்கப்படுவதற்கு முந்தைய இரவு வாஜ்பாய் அரசு ஏன் கவிழ்க்கப்படக் கூடாது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் நள்ளிரவுவரை அவர் ஆற்றிய நீண்ட இடைவிடாத உரை அவருடைய அரசியல் அறிவு, ஆங்கிலப்புலமை, ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியது. பலமுறை மந்திரி பதவி வகித்தும் வாழ்க்கை முழுக்க எளிமையாக வாழ்ந்தவர் என்று பெயர் பெற்றுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு முதலே அல்ஜைமர் நோயால் அவதிப்பட்டு வந்த இவருக்கு, சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய 88-வது வயதில் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலை மரணமடைந்தார். .

Tags
Show More
Back to top button
Close
Close