சமீபத்தில் புனேவில் நடைபெற்ற ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டியில் ஜி.கே ஷெட்டி பள்ளியை சேர்ந்த தமிழக வீரர் D.ஆதித்யா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

2-வது ‘கேலோ’ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி மராட்டியத்தில் உள்ள புனே நகரில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் தடகளம், டென்னிஸ், வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் உள்பட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து ஏறக்குறைய 6 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நிறைவடைந்த இந்த விளையாட்டு திருவிழாவில், உள்ளூர் அணியான மராட்டியம் 85 தங்கம், 62 வெள்ளி, 81 வெண்கலம் என்று மொத்தம் 228 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது. 2-வது இடத்தை ஹரியானாவும் (62 தங்கம் உள்பட 178 பதக்கம்), 3-வது இடத்தை டெல்லியும் (48 தங்கம் உள்பட 136 பதக்கம்) பெற்றன. தமிழக அணி 27 தங்கம், 35 வெள்ளி, 25 வெண்கலத்துடன் மொத்தம் 87 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது.

இதில் தமிழக வீரர் ஆதித்யா ஒரு தங்க பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். ஆதம்பாக்கத்தில் உள்ள ஜி.கே ஷெட்டி பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒரே நேரத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் சமமாக கவனம் செலுத்தி பல சவால்களை தாண்டி இந்த சாதனை புரிந்துள்ளார். விளையாட்டையும், கல்வியையும் சமநிலை நோக்குடன் ஆதித்யா அணுக பள்ளி நிர்வாகம் தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளது. ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் ஆதித்யாவிற்கு உறுதுணை புரிந்துள்ளனர். குறிப்பாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வீரபத்திரன், ஆதித்யாவின் திறமைகளை மேற்கேற்றி சாதிக்க கடமை புரிந்துள்ளார்.

கதிர் நியூஸ் சார்பாக மாணவன் ஆதித்யாவிற்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Share