மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படாமல் முடங்கியதால், அவசரச் சட்டத்தை, மீண்டும் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருமணமான இஸ்லாமிய ஆண், தமது மனைவியை ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என கூறி விவாகரத்து செய்யும் முறை கிரிமினல் குற்றம் என்பதை உறுதி செய்ய மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் படி முத்தலாக் தடையை மீறி ஒருவர் செயல்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது. இது தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. பின்னர் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியது.

அவசரச் சட்டத்தின் ஆயுள் 6 மாதம் தான் என்பதுடன், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய 42 நாட்களில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்குள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்து விட்டது. இதனால் செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் தடை அவசர சட்டம், வரும் 22-ஆம் தேதியுடன்  காலாவதியாகிறது. இதையடுத்து அவசரச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் 31-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால், முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share