மோடி சர்காரின் திட்டங்களில் ஏழை மக்களுக்கு அதிக அளவில் பயன் தரும் திட்டம் பிரதமரின் ஆயுஷ்மான் எனப்படும் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தற்போது பயனடைந்து வருபவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கிலிருந்து கோடிக்கணக்காக உயர்ந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தை விட வட மாநிலங்கள்தான் அதிக அளவில் பயன்பெற்றுவருவதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட அதிக அளவில்  இத்திட்டத்துக்கான பயன் தொகையை கோரியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக பிசினஸ் லைன் ஆங்கிலப் பத்திரிகை ஆய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமரின் இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 1.47 கோடி பேர் பயனடைய தகுதி உள்ளவர்கள். இத்திட்டத்தின் மூலம் ₹5 லட்சம் வரை பயனடையலாம். இந்த நிலையில் அதிக அளவில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கையில் முதல் மாநிலமாக சட்டீஸ்கர் மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 1.24 லட்சம் பேர். அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை 1.05 இலட்சம் பேர். மூன்றாவதாக தமிழகத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை 90,300 பயனாளிகள். தேசிய அளவில் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட பயனாளி கோரிய சராசரி தொகை ₹13,000. ஆனால், தமிழக பயனாளிகள் பயன்பெற்ற பின் கோரும் சராசரித்தொகை ₹17,600. அதாவது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக பயனாளிகள் ₹4,600  இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக பலன் பெறுகின்றனர். இதனால் இந்த திட்டத்துக்கான நிதி மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு கூடுதலாக செலவிடப்படுகிறது என்றும், மற்ற மாநிலங்களை காட்டிலும் கூடுதல் நிதி பயன்களை தமிழகம் அடைவதாகவும் அந்த ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பயனடைவோர் எண்ணிக்கையில் நாட்டிலேயே 3-வது இடத்தில் இருந்தாலும் பயனடையும் தொகையை பெறுவதில் தமிழகமே முதலில் உள்ளது.

Share