தமிழ் நாடு

“நான் தமிழ் மொழியின் ரசிகன், ஆனால் அந்த மொழியைப் பேசத் தெரியாத துரதிருஷ்டசாலி” பிரதமர் மோடி தமிழக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பேச்சு

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தி, மராட்டி, போத்புரி, ஹிந்தி, சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பரிச்சயம் உள்ளவர். நன்றாகவும் பேசுவார். அவர் பாரதியார் போல ஒரு பன்மொழிப் பிரியர். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மொழி மிகவும் முக்கியம் எனவும், நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன் எனவும், ஆனால், தமிழ் மொழி பேசத் தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் உள்ளேன் என்றார்.

மேலும், சிறு நிறுவனங்களின் முன்னேற்றமே நமது பிரதான இலக்கு. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக ஒப்புதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். நாம் நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நிலையிலும் பாடுபட்டு வருகிறோம். மறுபுறத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென்ற சொந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக சில குடும்ப வாரிசு கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து அணி திரண்டு உள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை. பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும்.

பாஜகவின் வெற்றி, மோடி, அமித்ஷாவினால் கிடைத்தது அல்ல. நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டியினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர செயல்பட வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி மிகப்பெரிய வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்றார். மேலும், பாஜகவில் மட்டுமே சாதாரண மக்கள் கூட உயர்பதவிக்கு வர முடியும் என்ற மோடி, தமிழக பாஜக தலைவர் கடினமாக உழைக்கக்கூடியவர் என தமிழிசைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பூத் கமிட்டி தொண்டர்கள் பிரதமர் மோடியிடம் பலதிட்டங்கள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் மனம் விட்டு பேசினர். அவர்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உற்சாகத்துடன் உரையாடினார்.

Tags
Show More
Back to top button
Close
Close