பா.ஜ.க-வினர் மத்தியில் வீடியோ மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசினார். அப்போது , “நமது பழைய நண்பர்களை வரவேற்போம். திறந்த மனதுடனேயே இருப்போம்” என்று பேசினார். மோடியின் இந்த கருத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஸ்டாலின் தனது அறிக்கையில், “வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. பா.ஜ.க-வுடன் ஒருபோதும் தி.மு.க கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, “பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி குறித்து கருத்து கூறியது பொதுவாகத்தான். அவர், ஒற்றைக் கருத்துடைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு ஏன் தி.மு.க கொந்தளிக்க வேண்டும்? தி.மு.க தான் காங்கிரஸுடன் ஒற்றுமையாக போய்க் கொண்டிருக்கிறதே. பிறகு ஏன் அவர்களுக்கு இந்தப் பதற்றம்? ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அப்படியிருக்கையில், பா.ஜ.க ஒரு அறிவிப்பு வெளியிட்டால் அது ஏன் தி.மு.க-வுக்குப் பிரச்னையாக இருக்கிறது. பிரதமர் மோடி, மிக கண்ணியத்துடன் நடந்து கொண்டார். ஆனால், ஸ்டாலினுக்கு அப்படிச் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

Share