குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி ₹3 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த ஆன்மீக பூமியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. சபரிமலை வி‌ஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை அறிவிக்கவில்லை. வருகிற 22-ம் தேதி மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறிய பிறகே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரிதானா? என்பதற்கு மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.

கேரளாவில் கம்யூனிஸ்டு அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகிவிட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த எண்ணம் நல்ல ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து சத்தம் போட்டு கடவுளை மதிக்காமல், ஆசாரங்களை மதிக்காமல் செயல்படுகின்றனர்.

இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் இவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு ஐயப்பன் அதனை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share